செவ்வாய், 31 அக்டோபர், 2017

இன்பத் தமிழ்!

தமிழுக்கும் அமுதென்று பேர்!
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்றுபேர்!
இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின்
விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள்
வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள்
உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
இன்பத் தமிழ் நல்ல
புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
இன்பத் தமிழ் எங்கள்
அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
இன்பத் தமிழ் எங்கள்
கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!
இன்பத் தமிழ் எங்கள்
வலமிக்க உளமுற்ற தீ!

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்-

தமிழின் இனிமை!

கனியிடை ஏறிய சுளையும்
முற்றல் கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும்,
காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும்
தென்னை நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும்,
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!
 பொழிலிடை வண்டின் ஒலியும்
ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும்,
வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும்
பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவனேனும், தமிழும்
நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
பயிலுறும் அண்ணன் தம்பி,
அக்கம் பக்கத்துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை
என்னைச் சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போல் பேசிடும் மனையாள்,
அன்பைப் கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம்
தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர்!
நீலச் சுடர்மணி வானம்
ஆங்கே நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம்
ஆங்கே கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும்
நல்ல மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர்
தமிழின் விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும்
பசுநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு
கானில் நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா!
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்-

ஞாயிறு, 5 மார்ச், 2017

என்னோடு நீ இருந்தால்...!

என்னோடு நீ இருந்தால் உறவெல்லாம் இனிமையடி
பிரிவென்ற சொல் வந்தால் வாழ்வில்லை மரணமடி!
உறவில்லை என்றாலும் மனமெல்லாம் உன் நினைப்பு
நீ மறந்து நின்றாலும் கனவெல்லாம் உன் தவிப்பு!
கனவாக உன்னை நினைக்க என் மனதில் இடமில்லை
நீ இல்லை என்றாலோ என் வாழ்வும் நிலைப்பதில்லை!
காதல் என்ற சொல்லை நீ களங்கம் என்று மாற்றாதே
இதயத்தை எடுத்து விட்டு என்னை மறந்து செல்லாதே!
ஏதேதோ சொல்கிறாய் வார்த்தையாலே கொல்கிறாய்
என் மனதை புரிந்து கொண்டும் துன்பத்தில் தள்கிறாய்!
ஏன்தான்  வதைக்கிறாய் பாசத்தை வெறுக்கிறாய்
உயிரற்ற உடலாக எனைப்பார்க்க நினைக்கிறாய்?
உன்னை எண்ணி வாழுவதால் கேவலமாய் மிதிக்கிறாய்
பெண் என்றால் அன்பென்ற வசனத்தைக் கெடுக்கிறாய்!
என் மனதில் ஏன் புகுந்து வேதனையை கொடுக்கிறாய்?
காதலுக்காக கவிதை பிறந்தது எனக்காக நீ பிறந்தாய்
என நினைத்து நான் இருந்தேன்
எனைக்கொன்று நீ செல்ல நினைத்த கதையறிந்து
தவியாய் தவிக்கின்ற கதை நீ அறிவாயா?
வேதனையை சொல்ல வழியொன்றும் தெரியவில்லை!
உன் மனம் புரிந்துகொள்ளும் மொழி எனக்கு தெரியவில்லை!
நீ பேசுகின்ற வார்த்தையிலே தெளிவொன்றும் தெரியவில்லை!
விதியென்று சொல்வதற்கு மதி கெட்டுப் போகவில்லை!
மதி கெட்டுப் போவதற்கு சதியொன்றும் செய்யவில்லை!
எனை மறந்து செல்ல நினைக்கின்ற நீ கள்ளியடி!
அதற்கு முன் எடுத்து வை எனக்கு நீ கொள்ளியடி!