செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

உன் தாயை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

உன் மனைவி,உன் பிள்ளை என
வாழும் மானிடனே!
தன் கணவன்,தன் பிள்ளை என
வாழ்ந்த உன் தாயை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
தன் பசி மறந்து,உன் பசி போக்க
உணவு தேடி வந்து உனக்கு
ஊட்டி விட்டு,பட்டினி கிடந்து
உனை வளர்த்த உன் தாயை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
வழிப் பிச்சைக்காரனுக்கு
சில்லறை போட்டதுபோல்
உன் தாய்க்கும் செய்துவிட்டு
ஆடம்பர வாழ்க்கையிலே
திளைத்திருக்கும் மானிடனே!
உன் தாயை உனக்கு
ஞாபகம் இருக்கிறதா?
உனக்கு சிறு தலை வலி என்றால்
தன் மடியில் உன் தலை சாய்த்து
தைலத்தால் உன் நெற்றி வருடி
சுகம் கொடுத்த உன் தாயை
மானிடனே உனக்கு ஞாபகம்
இருக்கிறதா?
பொய்யான உலகினிலே
மெய்யான தெய்வங்கள் பெற்றோரே!
அட..மானிடனே இன்னுமா
உனக்கு ஞாபகம் வரவில்லை
உன் தாயை?

வியாழன், 31 ஜூலை, 2014

மறந்திடாத பிறந்த ஊர்!

மறந்திடாத பிறந்த ஊரும்,மனதில் நிலைத்த ஊராரும்
வாழ் காலமெல்லாம் நிறைந்திருக்கும்
இனிமை பொங்கும் கவிதைகளே!
பெற்றெடுத்த தாய்,தந்தை
அரவணைத்த ஊர்மக்கள் எல்லோரும் பெற்றோரே!
நடை பயில்ன்ற எம் வீதி
பயில்வித்த என் தந்தை எந்தனுக்கு கடவுள் என்பேன்!
தெற்கு வீதியில் இருந்து வடக்கு வீதி புளியங்கூடல்
சந்திவரை ஒரு நாளில் பலமுறை நம் கால் பதியும்.
தணிகாசலம் அண்ணா கடை தொடங்கி
சிதம்பரியப்பா மினி சினிமா வரை
ஊர் நண்பர்கள் எங்களது நட்பு விரியும்.
ஊர் பிரிந்து நாம் வந்து வருடங்கள் பலவாயிற்று
என்றாலும் ஊரவரின் பேச்சொலிகள் இன்றும்
ஒலிக்கிறது காதுகளில்!
எம் ஊர் இன்று பலபேரை இழந்து தவிக்கிறது!
அவர்களையும் மறப்பதற்கு முடியவில்லை.
வாழ்க்கையை வாழாது எத்தனையோ
இளம் உயிர்கள் பாதி வழி செல்லும் முன்னே
பிரிக்கப்பட்டதை எப்படி மறந்திடுவோம்?
காயங்கள் ஆறாது செய்வதறியாது 
மெளனித்து இருக்கும் எத்தனை
குடும்பங்கள் எம் ஊரில் எப்படி தேற்றிடுவோம்?
ஊரும் ஊரவர் நினைவும் என்றும் அழியாது.

திங்கள், 28 ஜூலை, 2014

மறக்க முடியாத வாழ்க்கையது!

மறக்க முடியாத வாழ்க்கையது!
ஊர் வாழ்க்கையையும்
புலத்து வாழ்க்கையையும்
ஒப்பிட முடியவில்லை.
மேல் நாட்டில் வாழ்ந்தாலும்-எம்
ஊர் வாழ்க்கையே-இன்னும்
மேல் வாழ்க்கையாய் தெரிகிறது!
அன்பு,அரவணைப்பு,அறம்,
ஆறுதல் என எம் ஊரின் மடி
எம்மை தாங்கிக்கொண்டது.
புலம்பெயர் தேசத்தில் வசதிகள்
இருந்தாலும்,புரியாத மொழியும்,
தெரியாத மனிதரும்,சுவையில்லா
உணவும்,அன்பில்லா மனமும்
நிம்மதியில்லா வாழ்வும் என்றானது.
புழுதி மண் நிறைந்த எம்மூரின் இன்பம்
பளிங்கு பதித்த புலத்தில் இல்லையே!
கல்லுக்கும்,முள்ளுக்கும்
அஞ்சாத கால்கள்-இன்று செருப்பின்றி
நடக்க முடியாமல் போனதே!

செவ்வாய், 8 ஜூலை, 2014

ஏனிந்த கல்மனம்!

பிரிவுகள் வந்தபோது கண்ணீர்
விட்டு அழுதோம்!
நெஞ்சு அடைக்கும்வரை
துயரத்தில் வீழ்ந்தோம்!
உறவுகள் எங்கள்
உயிரென தொழுதோம்!
எல்லாமே இன்று
என்னாகிப்போனது?
பாச நெஞ்சங்கள்
ஏன் கல்லாகிப்போனது?
வாழ்வென்பது நிரந்தரமற்றது
பாசம் கூடவா
அப்படியானது?
பணம் கொடுத்து
பாசம் வேண்டும் உறவுகள்
எதற்கு நமக்கு?
எல்லா மனமும்
காய்ந்து கிடக்கையில்
எம் மனதில் மட்டும் ஏன்
இன்னும் ஈரம்?
யாரிடம் சொல்லி
எம்மை தேற்றலாம்?
மனதின் வலியை
எப்படிப் போக்கலாம்?
ஏதோ கொஞ்சம்
எழுதிப் பார்க்கலாம்!
போலி மனங்களை
ஒதுக்கித் தள்ளலாம்!

ஞாயிறு, 6 ஜூலை, 2014

வாழ்வு!

வாழ்வு எது என்பதை தேடும்போது
நாடகம் எது என்பதைத்தான்
கண்டுகொள்ள முடிந்தது.
சொந்தம்,பந்தம்,நட்பு,சுற்றம் எல்லாருமே
நடிப்பை கற்றுக் கொண்டார்களே தவிர
உண்மையான வாழ்வை புரிந்து கொள்ளவில்லை!
அன்பு என்ற பழரசத்தில் நஞ்சை
கலந்து கொடுத்தவர்களே அதிகம் பேர்!
இந்த உலகில் அன்பைத்தவிர
வேறெதுவும் நிரந்தரமில்லை என்பதை
ஏனோ மனித சமூகம் உணர மறுக்கிறது.

என்றும் புதிய நினைவுகள்!

நிலாவே!
உன்னை காணும் போதெல்லாம்
பூமிப்பந்திலே,
எம் ஊரின் தெருக்களிலே
உலா வந்த நிலாதான்
நினைவில் நிற்கிறாள்!
காலங்கள் உருண்டோடியபோதும்
இளமைக்காலத்தின் நினைவுகள்
இன்றும் புதுமையாகவே தெரிகிறது.
அது ஒரு நிலாக்காலம்!
என் மனதில் ஒளி வீசிய
நிலாக்காலம்!
வீதியெங்கும் சுற்றித்திரிந்த
உலாக்காலம்!
கற்பனைகள் பல கொண்ட
கனாக்காலம்!