செவ்வாய், 21 ஜூன், 2016

பள்ளிக்கூட நினைவு!

பள்ளிக்கூட நினைவு-அது
கலைந்திடாத கனவு!
நாட்கள் ஓடிப்போகும்
காலம் மாறிப்போகும்-எனினும்
கல்விக்கழக வாழ்க்கை என்றும்
அழிந்திடாது வாழும்.
வகுப்பில் ஒற்றுமை காத்தோம்!
அன்புச் சண்டை போட்டோம்!
இனிப்பு வகைகள் வாங்கி
சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்!
என்ன உலகம் என்று
இன்று சோர்ந்து போகும் போதும்
அந்த நாளின் நினைவு
மனதில் வந்து வந்து இனிக்கும்!
உரிமையோடு பேச பல
நல்ல உள்ளம் கொண்டோம்
ஆறுதலை பகிர பல
அன்பு உள்ளம் கண்டோம்.
ஏதேதோ மகிழ்ச்சி அது
இன்றும் மனதில் நெகிழ்ச்சி!
பிரிவு செய்த சூழ்ச்சி-ஆனால்
மறந்திடுமோ அந்தக் காட்சி!
அத்தனை நட்பு முகமும்
இன்று எந்தன் அகமே!

வெள்ளி, 25 மார்ச், 2016

இனிமை தரும் கனவு!

காலம் பற்பல மாற்றங்களை
கொடுத்திருக்கிறது-ஆனாலும்
மனதில் உள்ள நினைவுகள்
மட்டும் காலத்தை வென்று
மாறாமல் இருக்கிறது!
நேசித்த அன்பும்,யாசித்த உறவும்
இன்றும் மனதில் இளமையோடு
துள்ளுகிறது!
விழியெனும் அம்புகள் எய்தபோதினில்
மனமது தடுக்கி விழுந்த
நினைவுகள்!
புன்னகை பூக்கள் மெல்லென தடவ
தேனருவியில் குளித்த
நினைவுகள்!
எல்லாமே இன்றும் நினைவாக நின்று
கனவாக வரும் பொழுதில்
சுகமாக தெரிகின்றது
ஒவ்வொரு நொடியும்!
நல்ல மனதுக்குத்தான் நேசிக்கத்
தெரியும்!
கறையில்லா உள்ளத்தால்தான்
யாசிக்க முடியும்!
சண்டைகள் தாலாட்டாகவும்,
கோபங்கள் செல்ல
விளையாட்டாகவும் இருப்பது
பாச நெஞ்சங்களுக்கு மட்டும்தான்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

சுதந்திர தினம்!(04.02.1948)

பிரித்தானியர்கள் சிங்கள இனவாதிகளிடம்
இலங்கைத் திருநாட்டை ஒப்படைத்த நாள்
பெப்ரவரி நான்கு!
இதுதான் சிங்களதேசம் கொண்டாடும்
சுதந்திரநாள்.
இந்த தினத்தில்தான் தொடங்கியது
தமிழர்களின் கரிநாள்.
சிங்களமே நீ தமிழர்களை
எது வேண்டுமானாலும் செய்
என பிரித்தானிய ஏகாதிபத்தியம்
சிங்கள சர்வாதிகாரத்திடம்
இலங்கைத் திருநாட்டை விட்டுச்
சென்ற நாள் சிங்களத்தின்
சுதந்திர நாள்.தமிழர்களின் கரி நாள்.
கொள்ளை,கொலை,பாலியல் வல்லுறவு,
நில அபகரிப்பு,திட்டமிட்ட சிங்களக்
குடியேற்றம் என சிங்கள தேசம்
தமிழர்களின் மேல் வன்முறையை
கட்டவிழ்த்து விட அஷ்திவாரமிட்ட நாள்
இந்த பெப்ரவரி நான்கு
சிங்களத்தின் சுதந்திரநாள்
தமிழர்களின் கரிநாள்.
அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக,
கண்ணீரும் கம்பலையுமாக
சொல்லொணா துயரோடு
வாடி வதங்கிக் கொண்டிருக்கிறது
ஈழத்தமிழினம்.சிங்களத்தின் குதூகலத்தில்
தாமும் ஒட்டிக்கொண்டு
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு
விட்டதென துள்ளிக்குதிக்கிறது
ஒரு சில ஈனத்தமிழினம்.
ஈனப்பிறவிகளால் இழந்தது ஏராளம்!
இன்னும் அழிகிறது ஈழம்
இந்த ஈனக்கூத்தாடிகளால்!

புதன், 13 ஜனவரி, 2016

நான் கண்ட நட்பு!

என் மனதுக்குள் பல நட்புக்களை வைத்திருக்கிறேன்!
இடையிலே வந்து இடையிலே தொடர்பற்று
போனவர்கள்தான்-ஆனாலும் என் மனதிலே
அன்பெனும் பதிவை இட்டுச் சென்றவர்கள் அவர்கள்.
என் பாதணியை எடுத்து என் காலுக்கு அணிவித்து விட்ட
எளிமைமிகு "தினகரன்" எனும்
நண்பனையும் கண்டிருக்கிறேன்!
நான் பாதணி வாங்கவேண்டும் என்று சொன்னபோது
என்னிடம் புது பாதணி ஒன்று இருக்கிறது
நான் எங்கே போடப்போகிறேன் நீயே எடுத்துக்கொள்
என்று கொடுத்த "தாஸ்" எனும்
நண்பனையும் கண்டிருக்கிறேன்!
இடையிலே வந்தவர்கள்தான் என்றாலும்
அன்பை என் மனதிலே பச்சை
குத்தி வைத்தவர்கள் இவர்கள்.
நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலே
சந்தித்தவர்கள் ஏராளம் ஆனாலும்
தாராள மனப்பான்மையுடன் பழகிய
வெகு சிலரையே என்னால் காண முடிந்தது.
சொல்ல முடியாத எழுத முடியாத
சில நட்புக்களும் என் மனதிலே பதிவாகி
இருக்கிறார்கள் என்பதும் உண்மை!
போலி உலகத்தினுள்ளே சில நல்ல
உள்ளங்களை சந்திக்க முடிந்தது என்பதுவும்
மகிழ்வான நெகிழ்வான தருணங்களே.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஊரின் ஏக்கம்....!!!

வெளிநாடு கனவுலகமாகவும்
சொந்த ஊர் நிஜவுலகமாகவும்
எனக்குத் தெரிகிறது!
வெளிநாட்டில் ஆடம்பரமாக
வாழ முடிகிறது,வசதிகளோடு
வாழ முடிகிறது-ஆனால்
நிம்மதியை காண முடியவில்லை!
ஊரின் பழைய நினைவுகள் மட்டுமே
நிம்மதியான சிந்தனையை
கொடுக்கிறது!
உறங்கப்போனால் ஒரே
கனவாக வருகிறது எல்லாம்
ஊரின் காட்சிகளாகவே தெரிகிறது!
நட்பு,சுற்றம்,உறவு எல்லாம்
இன்று கனவில் மட்டும்தான்
காணமுடிகிறது!
எம் மனக்குமுறல்களை சொல்ல,
முகநூல்களும் வலைத்தளங்களுமே
எம் பக்கத்தில் நின்று எமக்கு
ஆறுதல் தருவன ஆகிவிட்டன!
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
அன்புக்காய் ஏங்கி ஏங்கியே கழிகிறது!
மனதின் வேதனையை
மனதைத் தவிர யார் அறிவார்.......???