புதன், 13 ஜனவரி, 2016

நான் கண்ட நட்பு!

என் மனதுக்குள் பல நட்புக்களை வைத்திருக்கிறேன்!
இடையிலே வந்து இடையிலே தொடர்பற்று
போனவர்கள்தான்-ஆனாலும் என் மனதிலே
அன்பெனும் பதிவை இட்டுச் சென்றவர்கள் அவர்கள்.
என் பாதணியை எடுத்து என் காலுக்கு அணிவித்து விட்ட
எளிமைமிகு "தினகரன்" எனும்
நண்பனையும் கண்டிருக்கிறேன்!
நான் பாதணி வாங்கவேண்டும் என்று சொன்னபோது
என்னிடம் புது பாதணி ஒன்று இருக்கிறது
நான் எங்கே போடப்போகிறேன் நீயே எடுத்துக்கொள்
என்று கொடுத்த "தாஸ்" எனும்
நண்பனையும் கண்டிருக்கிறேன்!
இடையிலே வந்தவர்கள்தான் என்றாலும்
அன்பை என் மனதிலே பச்சை
குத்தி வைத்தவர்கள் இவர்கள்.
நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலே
சந்தித்தவர்கள் ஏராளம் ஆனாலும்
தாராள மனப்பான்மையுடன் பழகிய
வெகு சிலரையே என்னால் காண முடிந்தது.
சொல்ல முடியாத எழுத முடியாத
சில நட்புக்களும் என் மனதிலே பதிவாகி
இருக்கிறார்கள் என்பதும் உண்மை!
போலி உலகத்தினுள்ளே சில நல்ல
உள்ளங்களை சந்திக்க முடிந்தது என்பதுவும்
மகிழ்வான நெகிழ்வான தருணங்களே.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஊரின் ஏக்கம்....!!!

வெளிநாடு கனவுலகமாகவும்
சொந்த ஊர் நிஜவுலகமாகவும்
எனக்குத் தெரிகிறது!
வெளிநாட்டில் ஆடம்பரமாக
வாழ முடிகிறது,வசதிகளோடு
வாழ முடிகிறது-ஆனால்
நிம்மதியை காண முடியவில்லை!
ஊரின் பழைய நினைவுகள் மட்டுமே
நிம்மதியான சிந்தனையை
கொடுக்கிறது!
உறங்கப்போனால் ஒரே
கனவாக வருகிறது எல்லாம்
ஊரின் காட்சிகளாகவே தெரிகிறது!
நட்பு,சுற்றம்,உறவு எல்லாம்
இன்று கனவில் மட்டும்தான்
காணமுடிகிறது!
எம் மனக்குமுறல்களை சொல்ல,
முகநூல்களும் வலைத்தளங்களுமே
எம் பக்கத்தில் நின்று எமக்கு
ஆறுதல் தருவன ஆகிவிட்டன!
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
அன்புக்காய் ஏங்கி ஏங்கியே கழிகிறது!
மனதின் வேதனையை
மனதைத் தவிர யார் அறிவார்.......???