புதன், 13 ஜனவரி, 2016

நான் கண்ட நட்பு!

என் மனதுக்குள் பல நட்புக்களை வைத்திருக்கிறேன்!
இடையிலே வந்து இடையிலே தொடர்பற்று
போனவர்கள்தான்-ஆனாலும் என் மனதிலே
அன்பெனும் பதிவை இட்டுச் சென்றவர்கள் அவர்கள்.
என் பாதணியை எடுத்து என் காலுக்கு அணிவித்து விட்ட
எளிமைமிகு "தினகரன்" எனும்
நண்பனையும் கண்டிருக்கிறேன்!
நான் பாதணி வாங்கவேண்டும் என்று சொன்னபோது
என்னிடம் புது பாதணி ஒன்று இருக்கிறது
நான் எங்கே போடப்போகிறேன் நீயே எடுத்துக்கொள்
என்று கொடுத்த "தாஸ்" எனும்
நண்பனையும் கண்டிருக்கிறேன்!
இடையிலே வந்தவர்கள்தான் என்றாலும்
அன்பை என் மனதிலே பச்சை
குத்தி வைத்தவர்கள் இவர்கள்.
நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலே
சந்தித்தவர்கள் ஏராளம் ஆனாலும்
தாராள மனப்பான்மையுடன் பழகிய
வெகு சிலரையே என்னால் காண முடிந்தது.
சொல்ல முடியாத எழுத முடியாத
சில நட்புக்களும் என் மனதிலே பதிவாகி
இருக்கிறார்கள் என்பதும் உண்மை!
போலி உலகத்தினுள்ளே சில நல்ல
உள்ளங்களை சந்திக்க முடிந்தது என்பதுவும்
மகிழ்வான நெகிழ்வான தருணங்களே.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஊரின் ஏக்கம்....!!!

வெளிநாடு கனவுலகமாகவும்
சொந்த ஊர் நிஜவுலகமாகவும்
எனக்குத் தெரிகிறது!
வெளிநாட்டில் ஆடம்பரமாக
வாழ முடிகிறது,வசதிகளோடு
வாழ முடிகிறது-ஆனால்
நிம்மதியை காண முடியவில்லை!
ஊரின் பழைய நினைவுகள் மட்டுமே
நிம்மதியான சிந்தனையை
கொடுக்கிறது!
உறங்கப்போனால் ஒரே
கனவாக வருகிறது எல்லாம்
ஊரின் காட்சிகளாகவே தெரிகிறது!
நட்பு,சுற்றம்,உறவு எல்லாம்
இன்று கனவில் மட்டும்தான்
காணமுடிகிறது!
எம் மனக்குமுறல்களை சொல்ல,
முகநூல்களும் வலைத்தளங்களுமே
எம் பக்கத்தில் நின்று எமக்கு
ஆறுதல் தருவன ஆகிவிட்டன!
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
அன்புக்காய் ஏங்கி ஏங்கியே கழிகிறது!
மனதின் வேதனையை
மனதைத் தவிர யார் அறிவார்.......???

ஞாயிறு, 19 ஜூலை, 2015

பாசமும் நேசமும்!

ஊரே உலகம் என சுற்றி சுற்றி வந்தபோது
கிடைத்த இன்பம் இப்போ உலகை
சுற்றி வரும்போது கிடைக்கவில்லை!
எது எனக்கு பிடித்ததோ அது என்னுடன்
இருக்கும்போதுதான் சந்தோசம் கிடைக்கிறது!
விருப்பம் என்பதற்கும் நேசம் என்பதற்கும்
பிரிவு என்பதுதான் வித்தியாசத்தை
புகட்டுகிறது!விருப்பப்பட்டதை
அடைந்த சில நாட்களிலேயே
அந்த விருப்பம் தீர்ந்து விடும்!-ஆனால்
நாம் எதை நேசித்தோமோ அதனுடனேயே
காலம் முழுதும் வாழத் தோன்றும்!
என் நேசத்திற்கு உரியதுதான் என் ஊர்!
என்னை என் ஊருக்கு கொண்டுவந்த
என் பெற்றோர் எனக்கு கடவுளரே!
காதலியை திருமணம் வரைதான்
வர்ணிக்க முடிகிறது,பிறந்த ஊரை
வாழும்வரை வர்ணிக்க முடிகிறது!

வெள்ளி, 12 ஜூன், 2015

மகாமாரித்தாயே!

அம்மா மகாமாரி!
ஒவ்வொரு ஆண்டும் நீ விழாக்கோலம்
பூணுகையில் எம் உள்ளத்து
கிடக்கையெல்லாம்
அலையாய் அடிக்குதம்மா!
இரவு பகலென்று இல்லாமல்-உன்
ஆலய வளாகமே எம்
வீடாய் இருந்ததம்மா!
உன் கோயில் மணியோசை கேட்டே
வளர்ந்தோம் நாம்!
தாகத்துக்கு தண்ணீரும்,
பசிக்கு உணவும் கொடுத்து வளர்த்த
எம் தாய் நீயம்மா!
நீயே எம்மை பத்திரமாய்
புலம்பெயர வைத்த தாயம்மா!
செருத்தனைப்பதி இருந்து
அரசாட்சி செய்பவளே!
உலகத்து மக்களுக்கு அருளாட்சி
புரிபவளே!
ஊர் வந்து உன்னை தரிசிக்க
முடியாத எங்களுக்கு
நாமிருக்கும் தேசமெல்லாம் வந்து
தரிசனம் கொடுக்கும்
அற்புதத்தாய் நீயே அம்மா!
எம் மக்கள் நிம்மதிக்கு நீயேதான்
என்றும் துணை அம்மா!

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

உன் தாயை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

உன் மனைவி,உன் பிள்ளை என
வாழும் மானிடனே!
தன் கணவன்,தன் பிள்ளை என
வாழ்ந்த உன் தாயை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
தன் பசி மறந்து,உன் பசி போக்க
உணவு தேடி வந்து உனக்கு
ஊட்டி விட்டு,பட்டினி கிடந்து
உனை வளர்த்த உன் தாயை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
வழிப் பிச்சைக்காரனுக்கு
சில்லறை போட்டதுபோல்
உன் தாய்க்கும் செய்துவிட்டு
ஆடம்பர வாழ்க்கையிலே
திளைத்திருக்கும் மானிடனே!
உன் தாயை உனக்கு
ஞாபகம் இருக்கிறதா?
உனக்கு சிறு தலை வலி என்றால்
தன் மடியில் உன் தலை சாய்த்து
தைலத்தால் உன் நெற்றி வருடி
சுகம் கொடுத்த உன் தாயை
மானிடனே உனக்கு ஞாபகம்
இருக்கிறதா?
பொய்யான உலகினிலே
மெய்யான தெய்வங்கள் பெற்றோரே!
அட..மானிடனே இன்னுமா
உனக்கு ஞாபகம் வரவில்லை
உன் தாயை?

வியாழன், 31 ஜூலை, 2014

மறந்திடாத பிறந்த ஊர்!

மறந்திடாத பிறந்த ஊரும்,மனதில் நிலைத்த ஊராரும்
வாழ் காலமெல்லாம் நிறைந்திருக்கும்
இனிமை பொங்கும் கவிதைகளே!
பெற்றெடுத்த தாய்,தந்தை
அரவணைத்த ஊர்மக்கள் எல்லோரும் பெற்றோரே!
நடை பயில்ன்ற எம் வீதி
பயில்வித்த என் தந்தை எந்தனுக்கு கடவுள் என்பேன்!
தெற்கு வீதியில் இருந்து வடக்கு வீதி புளியங்கூடல்
சந்திவரை ஒரு நாளில் பலமுறை நம் கால் பதியும்.
தணிகாசலம் அண்ணா கடை தொடங்கி
சிதம்பரியப்பா மினி சினிமா வரை
ஊர் நண்பர்கள் எங்களது நட்பு விரியும்.
ஊர் பிரிந்து நாம் வந்து வருடங்கள் பலவாயிற்று
என்றாலும் ஊரவரின் பேச்சொலிகள் இன்றும்
ஒலிக்கிறது காதுகளில்!
எம் ஊர் இன்று பலபேரை இழந்து தவிக்கிறது!
அவர்களையும் மறப்பதற்கு முடியவில்லை.
வாழ்க்கையை வாழாது எத்தனையோ
இளம் உயிர்கள் பாதி வழி செல்லும் முன்னே
பிரிக்கப்பட்டதை எப்படி மறந்திடுவோம்?
காயங்கள் ஆறாது செய்வதறியாது 
மெளனித்து இருக்கும் எத்தனை
குடும்பங்கள் எம் ஊரில் எப்படி தேற்றிடுவோம்?
ஊரும் ஊரவர் நினைவும் என்றும் அழியாது.

திங்கள், 28 ஜூலை, 2014

மறக்க முடியாத வாழ்க்கையது!

மறக்க முடியாத வாழ்க்கையது!
ஊர் வாழ்க்கையையும்
புலத்து வாழ்க்கையையும்
ஒப்பிட முடியவில்லை.
மேல் நாட்டில் வாழ்ந்தாலும்-எம்
ஊர் வாழ்க்கையே-இன்னும்
மேல் வாழ்க்கையாய் தெரிகிறது!
அன்பு,அரவணைப்பு,அறம்,
ஆறுதல் என எம் ஊரின் மடி
எம்மை தாங்கிக்கொண்டது.
புலம்பெயர் தேசத்தில் வசதிகள்
இருந்தாலும்,புரியாத மொழியும்,
தெரியாத மனிதரும்,சுவையில்லா
உணவும்,அன்பில்லா மனமும்
நிம்மதியில்லா வாழ்வும் என்றானது.
புழுதி மண் நிறைந்த எம்மூரின் இன்பம்
பளிங்கு பதித்த புலத்தில் இல்லையே!
கல்லுக்கும்,முள்ளுக்கும்
அஞ்சாத கால்கள்-இன்று செருப்பின்றி
நடக்க முடியாமல் போனதே!